"ஹலோ தலைவரே... சட்ட மன்ற கூட்டத் தொடர்ல கவர்னர் ரவி வெளிநடப்பு செஞ்சிருக்காரே...?''

Advertisment

"ஆமாம்ப்பா.. வழக்கம்போல அவரு இந்தமுறையும் வெளிநடப்பு செஞ்சிருக்காரு. அதப்பத்தி விளக்கமா சொல்லுப்பா.''

Advertisment

"ஆமாங்க தலைவரே, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம், 20ஆம் தேதி கவர்னர் ரவியின் உரையுடன் தொடங்கிச்சு. ஆனால், தேசிய கீதம் வாசிக்கலைன்னும், மைக்க அணைச்சுட்டாங் கன்னும் குற்றம்சாட்டி வெளிநடப்பு பண்ணிட்டார் கவர்னர் ரவி. அவர் கிளம்பினதும், கவர்னரின் செயல்பாட்டை விமர்சித்து, கவர்னருக்கு எதிரான தீர்மானத்தை வாசித்தார் முதல்வர் ஸ்டாலின். முதல்வருக்கு போட்டியா, தி.மு.க. அரசின் மீது குற்றம்சாட்டி, லோக் பவனிலிருந்து ஒரு அறிக்கை ரிலீசாச்சு. அதாவது, வெளிநடப்பு செய்றதையும், அதுக்காக தி.மு.க. அரசை குற்றம்சொல்றதையும் முந்தின நாளே முடிவெடுத்து அறிக்கை ரெடி பண்ணி வச்சுட்டு தான் சட்டமன்ற கூட்டத்துக்கே கவர்னர் வந்திருக்கார்! டெல்லியிலிருந்து வந்த உத்தரவை நிறைவேற்றத்தான் கவர்னர் திட்டமிட்டு இப்படி நடந்துக்கிட்டார்னு கல்வியாளர்கள் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியிலும் கடும் விமர்சனங்கள் வந்திருக்கு. இந்நிலையில், 24ஆம் தேதியோட சட்டமன்றம் நிறைவுபெறவுள்ளதால், அடுத்ததா பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகளை இடம்பெற வைக்கலாம்னு முதல்வர் அதிகாரிகளோட ஆலோசிச்சுக் கிட்டிருக்காராம்''

rang1

"காங்கிரஸ் மா.செ.க்கள் நியமனத்தில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸில் பலத்த அதிருப்தி நிலவுதாமே?''

Advertisment

"ஆமாங்க தலைவரே, ஒருவழியா இழுபறியெல்லாம் முடிஞ்சு, தமிழக காங்கிரஸில் 72 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனத்தை தமிழக காங்கிரஸ் அறிவிச்சிடுச்சு. ஆனால் இந்த நியமனத்தில் பல மாவட்டங்களில் அதிருப்திகள் வெடிச்சுக்கிட்டி ருக்கு. குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்ட தலைவ ராக வாணியம்பாடி யை சேர்ந்த வழக் கறிஞர் சையது புர்ஹானுதீன் நிய மிக்கப்படுவார்னு கடந்த 6 மாதமா எதிர்பார்ப்பு இருந் தது. கடந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸை இம்மாவட்டத்தில் வளர்க்க பாடுபட்டிருக்கார். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்தவர் சையது புர்ஹானுதீன். திருப்பத்தூர் மாவட்ட காங்கிரசின் முகம் நீங்கள்னு ராகுல்காந்தியே இவரை பாராட்டியிருக்கார். தெலுங்கானா, புதுச்சேரியின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராகவும் இருக்கார்.  மாவட்டத்தி லுள்ள ஆம்பூர், வாணியம்பாடி இஸ்லாமியர்களின் ஆதரவும் இவருக்கிருக்கு. செல்வப்பெருந்தகையும், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக நீங்க தான் வரப்போறீங்கன்னு பாராட்டியிருக்கார். கடைசி நேரத்தில், கார்த்தி சிதம்பரம் இடையில் புகுந்து சிபாரிசு செய்ததில், சையது புர்ஹானுதீனுக்கு பதில் விஜய் இளஞ்செழியன் என்பவரை நியமித்திருக்கிறார்கள். இவர் ஏற்கெனவே ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றவர். இவரை நியமித்ததால், மாவட்ட காங்கிரஸாரும், ஆம்பூர் -வாணியம்பாடியிலுள்ள இஸ்லாமியர்களும் அதிருப்தியாகியிருக்காங்க. திருப்பத்தூர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் சையது புர்ஹானுதீனின் செல்வாக்கால் காங்கிரஸ் ஜெயிக்கும்னு இருந்த சூழலில், அவரை காங்கிரஸ் கைவிட்டதை கவனித்த த.வெ.க. மாநில நிர்வாகிகள், இரண்டு நாட்களாக த.வெ.க.வில் சேர்ப்பதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில், த.வெ.க.வில் இணைய சம்மதம் தெரிவிச்சிருக்காராம்''

"தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்த்துக்க பா.ஜ.க. மறுத்துடுச்சுன்னு சொல்றாங்களே, உண்மையா?''

"உண்மைதாங்க தலை வரே, தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவும், அவரது சகோதரர் சுதீஷும், ஒரே நேரத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வோட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவர்றாங்க. ஆனால், கூட்டணிக்காக இவங்க வைக்கிற கோரிக்கையை கேட்டு ரெண்டு கட்சியுமே கிறுகிறுத்துப் போயிடுச்சாம்! அதனால இவங்க போன்கால் வந்தாலே எடுக்காம புறக்கணிச்சு வர்றாங்களாம். இருந்தாலும் விக்ரமாதித்தன் போல மனம் தளராம தொடர் முயற்சிகளை அக்காவும் தம்பியும் எடுத்துவர்றாங்க. இந்நிலையில், தே.மு.தி.க.வையும் கூட்டணிக்குள் கொண்டுவந்து, மோடியோட மேடையில் பிரேமலதாவையும் ஏற்றலாம்னு நினைச்சு பியூஷ் கோயல் பிரேமலதாவிடம் பேச, அவரோ, "40 சீட் வேணுங்கறதக்கூட நான் குறைச்சுக்கறேன்... எப்படியாவது எடப் பாடியிடம் பேசி ஒரு ராஜ்யசபா சீட் வாங்கிக் கொடுங்க... அப்டியே ஒரு மத்திய அமைச்சர் பதவியும் வாங்கிக்கொடுங்க'ன்னு சொன்னதைக் கேட்டு, ஒருகணம் ஆடிப்போன பியூஷ் கோயல், "சீச்சீ, இந்த பழம் புளிக்கும்'னு தொடர்பை துண்டிச்சுட்டாராம்''

"கர்நாடக டி.ஜி.பி. ராமச் சந்திர ராவ் விவகாரத்தால கர்நாடகவே கொந்தளிச்சுப் போயிருக்குபோல''…”

rang2

"ஆமாங்க தலைவரே, கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி. யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியில் இருந்தபோது இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அலுவலக அறையிலேயே, ராமச்சந்திர ராவ் பல்வேறு பெண்களுடன், ஆபாச செயல்களில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.  இவர் வேறு யாருமல்ல, 14.8 கிலோ எடை கொண்ட தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல கன்னட நடிகை ரன்யா ராவின் வளர்ப்புத் தந்தை. இதையடுத்து, டி.ஜி.பி. அந்தஸ்திலான மூத்த அதிகாரி ராமசந்திர ராவை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட் டுள்ளது. விவகாரம் பெரிதான நிலையில் இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியபோது முதல்-மந்திரி சித்தராமையா, "இந்த விவகாரம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின்முன் அனைவரும் சமம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தால், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அரசியல்ரீதியிலான நெருக்கடி அதிகரித்துள்ளது
. அரசு, முறையான விசாரணை அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறதா என எதிர்க்கட்சிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.''

"பர்கூரில் தம்பிதுரைக்கும் கே.பி.முனுசாமிக்கும் இடையில் தள்ளுமுள்ளு நடக்குதாமே?''

"ஆமாங்க தலைவரே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடணும்னு அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை ஆசைப்படுறாராம். ஏற்கெனவே 2 முறை பர்கூர் தொகுதியில் போட்டி யிட்டு எம்.எல்.ஏ.வாகவும், கல்வித்துறை அமைச்ச ராகவும் இருந்தவர் தான் தம்பிதுரை. ஆனால் பெரும்பாலான நாட்கள் மக்களவை துணை சபாநாயகர், மத்திய அமைச்சர் பொறுப்புக்காக டெல்லியிலேயே இருந்திட்டார். "ரொம்ப நாளா டெல்லியிலேயே இருந்திட்டேன். கட்சித்தலைமை சொன்னதால எம்.எல்.ஏ. பதவியை துறந்துட்டு எம்.பி. தேர்தலில் நின்றேன். இந்தமுறை திரும்பவும் பர்கூர் தொகுதியில் போட்டியிடணும்'னு சொல்றாராம். இதுக்காகவே கடந்த ஓராண்டாக பர்கூர் தொகுதியில் மருத்துவ முகாம்கள், கிராமங்கள் தோறும் விளை யாட்டு உபகரணங்கள் கொடுப்பதுன்னு தொகுதியில் தன்னை அடையாளப்படுத்திக்கிட்டு வரு கிறார். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் இன்னொரு முகமாக செயல் பட்டுவரும் கே.பி. முனுசாமியோ, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கிருஷ்ணன் அல்லது தி.மு.க.விலிருந்து தான் அழைத்துவந்த இ.சி.கோவிந்தராசன் ஆகியோரில் ஒருவருக்குத் தான் சீட் வழங்க வேண்டும்னு தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதால் மனம் வெதும்பி யிருக்காராம் தம்பிதுரை. யார் பேச்சு எடுபடும்னு தெரியல!''

"ஆசிரியைகளை மோசமா திட்டி சர்ச் சையில் சிக்கியிருக்காராமே கல்வி அதிகாரி?''

"வரலாற்று மாவட்டத்தில், நடந்துமுடிந்த அரையாண்டுத் தேர்வுகளில் சில பள்ளிகளின் ரிசல்ட் குறைவாக இருந்திருக்கிறது. இதுதொடர்பா ரிவ்யூ மீட்டிங்னு சொல்லி இந்த மாவட்டத்திலுள்ள ஆசிரியைகளை அழைத்து, "என்ன ரிசல்ட் இது? ஒழுங்கா ரிசல்ட் கொடுக்கலைன்னா மாடு மேய்க்கப் போக வேண்டியது தானே? நல்லா திங்க தெரியுதுல்ல... இப்படி மினுக்கிட்டு வர்றதுக்கு பதிலாக வேற எங்காவது போய் இருக்க லாமே?'ன்னு ஆசிரியைகளை சகட்டுமேனிக்கு ஒருமையில் இழிவுபடுத்தி திட்டியிருக்கிறாராம் அந்த மாவட்ட பழனி எம்பெருமான் பெயர் கொண்ட முதன்மைக் கல்வி அதிகாரி. "இந்த அதிகாரியிடம் வேலை பார்ப்பதற்கு தற்கொலை பண்ணிக்கலாம் போல' எனத் தங்களுடைய சங்கங்களை அழைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மீது புகாரைக்கூறி கொந்தளிச் சிருக்காங்க பாதிக்கப்பட்ட ஆசிரியைகள்! இதேபோல இன்னொரு துறை சார்ந்த அதிகாரி மேலயும் புகார் வாசிக்கிறாங்க.''

"அட, அது எந்த அதிகாரி? அப்படி யென்ன பிரச்சனை?''

"கொங்கு மண்டலத்திலுள்ள மிகப்பெரிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நுண்ணுயிரியல் பிரிவின் அதிகாரியாக மதுரை சொக்கனுக்கு வாக்கப்பட்டவர் இருக்கார். இவர் செய்யும் அட்ராசிட்டிகளுக்கு அளவே யில்லைங்கறாங்க. இவரோட தொல்லையால இவருக்கு கீழ பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஐவர் அங்கிருந்து எஸ்கேப்பாகி, வேறு துறையில் சேர்ந்துட்டாங்க. இந்நிலையில், இவரின் கீழ் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர், பணியிலிருந்தபடியே மருத்துவத்துறையில் உயர் கல்வி படிச்சுட்டு வர்றார். இவர் கர்ப்பமானதால் பேறுகால விடுப்பில் சென்று, விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பியதும் மருத்துவ உயர்கல்விக்கான தேர்வு வந்திருக்கு. தேர்வு எழுதுவதற்காக மதுரை சொக்கனுக்கு வாக்கப்பட்டவரான மேலதிகாரியிடம் அனுமதி கேட்க, "பேறுகால விடுப்பு தவிர்த்து கூடுதலாக 14 நாட்கள் விடுப்பு எடுத்துட்ட. இப்பொழுது தேர்விற்காக கையெழுத்து கேட்கிற. அது முடியாது' என மறுக்க, "இல்லை மேடம், நான் லீவு கேட்கலை. தேர்வு எழுதத்தான் அனுமதி கேட்டேன்' என பதில் சொல்லவும், "உதவிக்கு ஒருத்தருகூட இல்ல. நீ பாட்டுக்கு கர்ப்பமாகிட்டுப் போய்ட்ட... யார் வேலையை பார்ப்பது? உன்னைய கர்ப்பமாக நானா சொன்னேன்?' என்றபடி அந்த அனுமதி பேப்பர்களை முகத்திலேயே வீசிவிட்டு சென்றிருக்கிறார். இவரது செயலால் மனம்நொந்த பெண் மருத்துவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீனிடம் புகாரளித்திருக்கிறார்.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்... வரவுள்ள தேர்தலை முன்னிட்டு, கூட்டணியில் கட்சிகளை சேர்ப்பது,  மாற்றுக் கட்சியினரை தங்களது கட்சியில் சேர்ப்பதுன்னு தமிழக முக்கிய கட்சிகள் தீவிரமாக இருக்குதுங்க. இந்நிலையில், ஓ.பி.எஸ். ஆதரவாளரும், ஒரத்த நாடு சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைஞ்சிருக்கார். அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் துணை ஒருங்கிணைப் பாளராக வைத்திலிங்கம் இருந்துவந்த நிலையில் அங்கிருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியமாகி யிருக்கார். வைத்திலிங்கம், ஜெயலலிதா அமைச்ச ரவையில் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும், ஜெயலலிதா அமைத்த நால்வர் அணியில் ஒருவராகவும் இருந்தவர். இப்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாக இருந்த நிலையில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மாதம் தான் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த நிலையில், தற்போது ஓ.பி.எஸ். ஆதரவாளரான வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா பகுதிகளை வலுபடுத்தும் நோக் கத்தில்தான் வைத்திலிங்கத்தை தி.மு.க.வுக்கு இழுத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.''

___________
நேருவை முடக்க டெல்லி கணக்கு!

rangbox

தி.மு.க. அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் ஊழல் நடந்துள்ளதாக அவர்மீது வழக்குப் பதிவுசெய்யக் கோரி டி.ஜி.பி.க்கு மூன்றாவது முறையாக கடிதம் அனுப்பியிருக்கு அமலாக்கத்துறை. இதுகுறித்து விசாரிச்சப்ப, தி.மு.க.வின் தேர்தல் பணிகளையும், வளர்ச்சியையும் முடக்கும் எண்ணத் தில்தான் கே.என்.நேருவுக்கு எதிராகக் காய் நகர்த்தப்படு வதாக சொல்றாங்க. வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக் கான டெல்டா மண்டலப் பொறுப் பாளராக கே.என்.நேரு செயல் பட்டுவருகிறார். நேருவின் தீவிர களப்பணிகளை முடக்குவதுதான் பா.ஜ. க.வின் அஜெண்டா. அதற்காக, நேருவை அச்சுறுத்தி, தங்களுக்கு சாதகமான அரசியல் சூழலை டெல்டா மாவட்டங்களில் உருவாக்க அமலாக்கத்துறையின் மூலம் பா.ஜ.க. முயற்சிக்கிறது என்கிறார்கள். அதேபோல், ஊடகங்களைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கத்தில் அழுத்தமும் ஆதிக்கமும் செலுத்துகிறது அமலாக்கத்துறை. இந்த அழுத்தங்கள் டெல்லியிலிருந்து வழங்கப்படுகின்றன. இப்படி இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளால், திருச்சி மாவட்டத்திலும், டெல்டா பகுதிகளிலும் கே.என்.நேருவுக்கும், தி.மு.க.வுக்கும் ஆதரவான அனுதாப அலைகள் அதிகரித்து வருகின்றன. கே.என்.நேரு போன்ற அமைச்சர்களை முடக்க நினைக்கும் டெல்லியின் கணக்கு ஒருபோதும் பலிக்காது என்கிறார்கள் உளவுத்துறையினர்.

-இளையர்